பிஹார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
பிஹார் தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் அகமது அப்துல் ஹய் தெரிவித்தார்.
1985-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அருண் குமார், கடந்த பிப்ரவரி மாதம் தீபக் குமார் ஓய்வு பெற்றதை அடுத்து, பிஹார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முடியவிருந்த நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்தார். பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த மறுநாள் தலைமைச் செயலாளராக அருண் குமார் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த முதல்வர் நிதிஷ் குமாரிடம், தலைமைச் செயலாளர் அருண் குமார் மறைவுச் செய்தி குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த வேதனையையும், வருத்தங்களையும் பதிவு செய்தார். இதையடுத்து அமைச்சரவைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மறைவுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிஹார் மாநிலத்தில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 2,480 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.