கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் இணையதளத்தில் உதவி கோரி ஏதேனும் தகவலைப் பதிவிட்டால் அவர்களின் குரலை நசுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது, அது வதந்தி என்று முன்முடிவுக்கு வரக்கூடாது என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. கரோனா 2-வது அலைக்கு ஏன முன்கூட்டியே மத்திய அரசு தயாராகவில்லை, மத்திய அரசு மொத்தமாக கரோனா தடுப்பூசிகளை வாங்கி விநியோகிக்கக்கூடாது? உள்ளிட்ட சரமாரியாக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
நீதிபதிகள் அமர்வு கூறுகையி்ல் “ ஒரு குடிமகனாக அல்லது நீதிபதியாக எனக்கு என்ன கவலை என்றால், இந்த தேசத்தின் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு, அது தொடர்பாக இணையதளத்தில் ஏதேனும் உதவி கோரினால், அவர்களை அடக்கவோ, அவர்கள் வெளியிடும் தகவலை மறைக்கவோ கூடாது.
மக்களின் குறைகளையும், குரல்களையும் கேட்க வேண்டும். அவ்வாறு மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராகவோ, அதாவது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கிறது,தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கிறது, மருத்துவர்கள், படுக்கைகள் பற்றாக்குறையாக இருக்கிறது என்று மக்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்தால் அது வதந்தி என முன்முடிவுக்கு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
மத்திய அரசும், மாநில அரசுகளும், அனைத்து மாநில காவல் டிஜிபிகளும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கக்கூட படுக்கைகள் இல்லை என்பது வேதனையானது.இது சூழல் மிகவும் மோசமாகியிருக்கிறது என்பதைகாட்டுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் வளர்ந்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை.
கரோனா தொற்று அதிகரித்து மக்களுக்கு சிகிச்சையளிக்க இடமில்லாவிட்டால் விடுதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறந்து கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுங்கள்.
ஏன் மத்திய அரசு இந்த கடினமான சூழலில் 100 சதவீதம் தடுப்பூசிகளை வாங்கி வைக்கவில்லை தயாரிக்கவில்லை. தடுப்பூசிகளில் மத்திய அரசுக்கு ஒருவிலை, மாநில அரசுகளுக்கு ஒருவிலை என இரு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன்.
மத்திய அரசு 50 சதவீதம் மட்டும் கொள்முதல் செய்வோம், மற்ற 50 சதவீதம் மாநிலங்கள் கொள்முதல் செய்யும் என்று தெரிவித்தார், இது நியாயத்தை நேர்மையை ஊக்குவிப்பதாக அர்த்தமா.
தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் என்பது மிகவும் தீவிரமானது. 50 சதவீதம் தடுப்பூசி மட்டுமே இலவசமாகக் கிடைக்கும், மற்ற தடுப்பூசி அதாவது 50 சதவீதம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுமா. நாட்டில் 18 முதல் 45 வயதுவரை 59 கோடி மக்கள் இருக்கிறார்கள்.
நாட்டில் ஏழைகளும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களும், பட்டியலினத்து மக்களும் இந்த விலை கொடுத்து வாங்கி தடுப்பூசியை எவ்வாறு செலுத்திக்கொள்வார்கள். அவர்களை எல்லாம் தனியார் மருத்துவமனைகளின் கருணைப் பெற விட்டுவிடலாமா.
தனியார்துறை மாதிரி நம்மிடம் கிடையாது. நாம் தேசிய தடுப்பூசிக் கொள்கை மாதிரியைத்தான் பின்பற்ற வேண்டும். சுதந்திரத்திலிருந்து அதைத்தான் பின்பற்றி வருகிறோம். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு எந்த விலைக்கு தடுப்பூசி விற்க வேண்டும் என்பதை, தனியார் மருந்து நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.