கரோனா தடுப்பூசிகள் தற்போதைக்கு இல்லை என்றும் மையங்களில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறும்போது, “ எங்களுக்கு இன்னமும் கரோனா தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.எனவே தடுப்பூசி மையங்களில் யாரும் வரிசையில் நிற்க வேண்டாம். நாங்கள் தொடர்ந்து தடுப்பூசி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். நாளை அல்லது மறு நாள் தடுப்பூசிகள் வரலாம். 3 லட்ச கரோனா தடுப்பூசிகள் முதல்கட்டமாக டெல்லி வரும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் இலவசத் தடுப்பூசி இருக்கும். 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பிரிவினரும், தனி நபர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, அனைத்து மக்களுக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மாநில அரசுக்கள் அறிவித்தன.இந்த நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.