இந்தியா

அதிகரிக்கும் கரோனா பரவல்; மாவட்டம் வாரியாக நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகமாக உள்ள 12 மாநிலங்களில் மாவட்டம் வாரியாக தேவையான கரோனா பரவல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பரவல் அதிகமாக உள்ள 12 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

12 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட அளவில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த ஒரு வாரத்தில், தொற்று பரவல், 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருந்தாலோ, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருந்தாலோ, அந்த மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றுப் பரவலை தடுக்க வேண்டும். உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT