இந்தியா

ஹெலிகாப்டர் பேர ஊழல் புகார்: எம்.கே.நாராயணனிடம் சிபிஐ விசாரணை

செய்திப்பிரிவு

மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்கான சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான ரூ. 3600 கோடி ஒப்பந்த விவகாரத்தில் லஞ்சம் கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணனிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

எம்.கே.நாராயணனை 'சாட்சியாக' விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், ஆளுநர் பதவியில் உள்ள ஒருவரிடம் விசாரணை நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாகும். ஆளுநர் பதவியிலிருந்து விலகவேண்டும் என புதிதாக ஆட்சியில் அமர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கொல்கத்தா சென்று ஆளுநர் மாளிகையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணையை நடத்தினர்.

2005ம் ஆண்டு மார்ச் 1ம்-தேதி நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த நாராயணன் தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்தார்.

2010ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தார். சொகுசு ஹெலிகாப்டர் சம்பந்தமான தொழில்நுட்ப நிபந்தனைகளில் முக்கிய மாற்றங்கள் செய்ய 2005ம் ஆண்டில் நாராயணன், கோவா ஆளுநர் பி.வி.வாஞ்சு ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. வாஞ்சுவையும் அழைத்து அவரது விளக்கத்தையும் சிபிஐ விரைவில் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய ரூ. 360 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. லஞ்சப் புகார் சர்ச்சையையடுத்து கடந்த டிசம்பரில் இந்த ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்தது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்கள், ஐரோப்பிய இடைத்தரகர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹெலிகாப்டர் பறக்கும் உயர வரம்பை குறைத்து இந்த பேரத்தில் அகஸ்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்தை சேர்க்க உதவினார் என்பது தியாகி மீதான புகார். இந்த குற்றச்சாட்டை தியாகி நிராகரித்துள்ளார்.

SCROLL FOR NEXT