கோவிட்டுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தில் நாட்டின் திறன்களை வலுப்படுத்துவதில், ரயில்வேத்துறை பல்முனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, 64 ஆயிரம் படுக்கைகளுடன் சுமார் 4000 தனிமை சிகிச்சை ரயில் பெட்டிகளை தயார்படுத்தியுள்ளது.
இந்த தனிமை சிகிச்சை பெட்டிகளை, ரயில்வே நெட்வொர்க் உள்ள இடங்களில் எளிதாக கொண்டுச் செல்ல முடியும். அதன்படி மாநிலங்களின் தேவைக்கேற்ப தற்போது 191 ரயில் பெட்டிகள், கொவிட் சிகிச்சைக்காக பல மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2990 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது இந்த தனிமை சிகிச்சை பெட்டிகள் தில்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பயன்பாட்டில் உள்ளன.
உத்திரப் பிரதேசத்தில் பைசாபாத், பதோலி, வாரணாசி, பரேலி மற்றும் நசிபாபாத் போன்ற முக்கிய இடங்களில் 50 தனிமை சிகிச்சை பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தில்லி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பயன்பாட்டில் உள்ள இந்த தனிமை சிகிச்சை பெட்டிகளின் விவரம்:
மகாராஷ்டிரா நந்துருபாரில் 58 நோயாளிகள் தற்போது இந்த தனிமை சிகிச்சை பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை மொத்தம் 85 பேர் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்த சிலர் வீடு திரும்பியுள்ளனர். இங்கு இன்னும் 330 படுக்கைகள் காலியாக உள்ளன.
டெல்லியில், மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப, 1200 படுக்கை வசதிகளுடன் 75 கொவிட் சிகிச்சை பெட்டிகளை ரயில்வே வழங்கியுள்ளது. 50 பெட்டிகள் சகுர்பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 பெட்டிகள் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திலும் உள்ளன. இவற்றில் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1196 படுக்கைகள் காலியாக உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் அருகேயுள்ள திகி ரயில் நிலையத்தில் 22 தனிமை சிகிச்சை பெட்டிகள் 320 படுக்கை வசதிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போபாலில் 20 பெட்டிகள் உள்ளன. இங்கு 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 280 படுக்கைகள் இங்கு காலியாக உள்ளன.
மேற்கண்ட மாநிலங்களில் மொத்தம் 103 பேர், தனிமை சிகிச்சை ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 34 பேர் வீடு திரும்பியுள்ளனர். 64 நோயாளிகள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உத்திரப் பிரதேசத்தில் மாநில அரசு வேண்டுகோள் விடுக்கவில்லை என்றாலும், 5 இடங்களில் 50 தனிமை சிகிச்சை ரயில் பெட்டிகள் 800 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.