கோப்புப்படம் 
இந்தியா

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே இறுதிக்குள் இந்தியா வரும்: டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் எதிர்பார்ப்பு

பிடிஐ

கரோனா வைரஸைத் தடுக்க ரஷ்ய அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே மாதம் இறுதிக்குள் இந்தியா வந்துவிடும் என்று ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள கரோனா வைரஸுக்கு எதிரான ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள ரெட்டீஸ் மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும் ரெட்டீஸ் நிறுவனம் முடித்துவிட்டது.

இந்நிலையில் அவரசத் தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மே மாதம் இறுதிக்குள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல்கட்ட இறக்குமதி நடந்துவிடும் என நம்புகிறோம். எங்களால் முடிந்தவரை மே இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்வோம்” எனத் தெரிவித்தார்.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரி அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு கோடை காலத்துக்குள் இந்தியாவுக்காக 5 கோடிக்கும் அதிகமான ஸ்புட்னிக் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்க 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் சில நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் ஏற்கெனவே சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வர உள்ளது.

SCROLL FOR NEXT