கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 3.60 லட்சம் பேருக்குத் தொற்று: 3,000க்கு மேல் தினசரி பலி

பிடிஐ

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3.60 லட்சம் பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 16.55 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து ஒரு கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 82.33 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் 381 பேரும், சத்தீஸ்கரில் 246 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 264 பேரும், குஜராத்தில் 170 பேரும், கர்நாடகாவில் 180 பேரும், ஜார்க்கண்டில் 131 பேரும், ராஜஸ்தானில் 121 பேரும், பஞ்சாப்பில் 100 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 28 கோடியே 27லட்சத்து 3 ஆயிரத்து 789 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 17 லட்சத்து 23 ஆயிரத்து 912 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT