உத்தரபிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஓர் உத்தரவிட்டிருந்தது. அதில், கரோனா வைரஸ் தொற்றால் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 28 நாட்கள் விடுப்புடன் ஊதியமும் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதைபெரும்பாலானோர் பின்பற்றவில்லை என புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், கரோனாவின் இரண்டாவது அலையால் கடந்த வருடத்தை விட அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அதே விதிமுறைகளை தனியாருக்காக மீண்டும் ஒரு உத்தரவாக பிறப்பித்துள்ளது. இதில் கரோனா தொற்று கொண்டப் பணியாளர்களுக்கு 28 நாட்களுக்கான விடுப்புடன் ஊதியமும் அளிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தொடர்பாக உத்தரபிரதேச அரசின் தொழிலாளர் துறையின் கூடுதல் செயலாளரான சுரேஷ் சந்திரா கூறும்போது,‘கடந்த வருடம் மார்ச் 20ல் அரசுபிறப்பித்த உத்தரவை அனைத்து ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் ஆணையர்கள் தீவிரமாக அமலாக்க வேண்டும். இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். கரோனாவிற்காகத் தற்காலிகமாக மூடப்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடை களும் தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.