மேற்கு டெல்லியில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டதற்கு மத்திய அரசு ரயில்வே துறையுமே பொறுப்பாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் அக்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மேற்கு டெல்லி, ஷகுர் பஸ்தி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகளை ரயில்வே துறையினர் இடித்து தள்ளினர். இந்த சம்பவத்தில் 6 மாத குழந்தை ஒன்று பலியானது. குடிசைகளை அகற்ற அதிகாரிகள் வருவதை அறிந்த மக்கள் அவசர அவசரமாக வீடுகளை காலி செய்ய நேரிட்டதில் குழந்தை இறந்தது. துணிக் குவியல் விழந்ததில் குழந்தை மூச்சுத்திணறி இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
குழந்தை இறந்த சம்பவம் குறித்து டெல்லி அரசு நீதி விசாரணைக்கு உத்தவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடியிருப்பு ஏற்பாடு செய்யத் தவறியதாக 3 அதிகாரிகளை முதல்வர் கேஜ்ரிவால் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறும்போது, “குடிசைகள் இடிக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பாகும். ரயில்வே நிலத்தில் 20-30 ஆண்டுகளாக இம்மக்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வது சிரமம். இது ரயில்வே துறையின் மனிதாபிமானமற்ற செயலாகும். மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்பது மத்திய அரசின் கொள்கையாகும். தற்போது இந்த மக்களின் மறுவாழ்வுக்காக ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?
ஆக்கிரமிப்பு அகற்ற நேரிட்டதில் 6 மாத குழந்தை இறந்துள்ளது. அதற்கு தலையிலும், விலாவிலும் காயம் இருந்தது பிரேதப் பரிசோதனை தெரியவந்துள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றப்போவது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நடவடிக்கை தொடங்கிய பிறகே எங்களுக்கு தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொபைல் டாய்லெட், கூடாரம், உணவு, போர்வை உள்ளிட்ட பொருட்கள் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
ரயில்வே மறுப்பு
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கியதாகவும் அதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே குழந்தை இறந்துவிட்டதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கும் குழந்தை இறந்ததற்கும் தொடர்பில்லை என்றும் ரயில்வே கூறியுள்ளது.
ராகுல் மீது கேஜ்ரிவால் விமர்சனம்
குடிசைகளை ரயில்வே அகற்றியதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் ஆம் ஆத்மி கட்சி எழுப்ப முயன்றது. ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கு அனுமதி மறுத்ததால் அக்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மீது ராகுல் குற்றம் சாட்டியதை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்தி இன்னும் குழந்தையாகவே இருக்கிறார். ரயில்வே துறை, மத்திய அரசின் பொறுப்பில் உள்ளது. மாநில அரசின் பொறுப்பில் இல்லை என்று அவரது கட்சி அவருக்கு சொல்லித் தரவில்லை போலும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “ராகுல் காந்தி மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று வீடுகள் இடிக்கப்படுவது காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்தள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிரதமர் மோடி – ராகுல் காந்தி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எனவேதான் அவர் எங்களை விமர்சிக்கிறார்” என்றார்.
இதனிடையே இந்த விகாரத்தில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை கேஜ்ரிவால் சந்திக்க விருப்பதாக கூறப்படுகிறது.