இந்தியா

கும்பமேளாவின் கடைசி ராஜகுளியல்: கரோனா பாதுகாப்புடன் இன்று 13 சபைகளின் சாதுக்களுடன் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஆர்.ஷபிமுன்னா

ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இன்று கடைசி ராஜகுளியல் நடைபெற்றது. இதில், கரோனா பரவலுக்கானப் பாதுகாப்புடன் 13 சபைகளின் சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைந்த அளவில் கலந்து கொண்டனர்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரின் கங்கைக் கரையில் கடந்த ஏப்ரல் 14 முதல் மஹாகும்பமேளா தொடங்கியது. இதன் முதல் ராஜகுளியலில் சுமார் 43 லட்சம் பக்தர்கள் புனித நீராடக் கலந்து கொண்டனர்.

இதில் கரோனாவுக்கானப் பாதுகாப்பு கடைபிடிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது. வட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என அப்புகாரில் கூறப்பட்டது.

இதனால், கடந்த மே 19 இல் ஹரித்துவாரின் சாதுக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு வேண்டுகோள் விடுத்தார். கரோனா பரவல் காரணமாக கும்பமேளாவை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும்படியும் அதில் வேண்டினார்.

எனினும், பிரதமர் மோடியின் இந்தக் கோரிக்கையை சில சாதுக்கள் சபையினர் ஏற்க மறுத்தனர். இன்னும் சிலர் கரோனா பாதுகாப்புடன் மீதம் உள்ள ராஜகுளியல் தொடரும் எனவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சைத்ர பூர்ணிமாவின் இன்றைய விடியலில் ஹரித்துவாரின் கங்கை கரையான ஹர்கி பவுடியில் கடைசி ராஜகுளியல் துவங்கியது. இதில், சாதுக்களின் 13 சபைகளும் அதன் வரிசைப்படி ராஜகுளியலை முடித்தனர்.

இதற்காக அவர்கள் முன்பு போல் பெருங்கூட்டமாக இல்லாமல், முதன்முறையாகக் குறைந்த எண்ணிக்கையில் வந்தனர். பைராகி அஹாடா உள்ளிட்ட ஒரிரு சாதுக்கள் சபையினர் மட்டும் சுமார் ஆயிரம் என அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

சுமார் 100 என குறைந்த எண்ணிக்கையில் வந்த மற்ற சபையின் சாதுக்களில் பலரும் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். மேலும் ஊர்வலம் மற்றும் குளியலின் போதும் சமூக விலகலை கடைப்பிடித்தனர்.

இவற்றைப் பார்த்து மேலும் பல சாதுக்களும், பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து கொண்டனர். சுமார் 9.30 மணி வரை நடைபெற்ற இந்த சாதுக்களின் குளியலுக்கு பிறகு பக்தர்களான பொதுமக்களின் முறை வந்தது.

இதில், சாதுக்களால் கிடைத்த கரோனா விழிப்புணர்வு பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்பட்டது. வழக்கப்படி, இன்னும் மே 18 இல் சங்கராச்சாரியார் ஜெயந்தி, மே 26 இல் புத்த பூர்ணிமா உள்ளிட்ட நான்கு ராஜ குளியல்கள் பாக்கி உள்ளன.

எனினும், கரோனா பரவலினால் இன்றைய கடைசி ராஜகுளியலாகக் கருதப்பட்டு பெயரளவில் முடிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் அரசின் அறிவிக்கையின்படி, ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கும்பமேளா முடித்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT