தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, தேர்தல் ஆணையத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதில், “தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம். அந்தக் குற்றச்சாட்டைத் தவிர்க்க முடியாது. கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்ததாகவும், கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை” என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து தெரிவித்த கருத்தை நான் வரவேற்கிறேன். தேர்தல் ஆணையம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது எனத் தெளிவாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவியதற்கு பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமும்தான் காரணம்.
நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் கரோனா பாதி்க்கப்பட்ட மாநிலங்களில் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் தங்கியிருக்கும் 2 லட்சம் மத்தியப் படைகளை வாபஸ் பெறுங்கள். இதில் 75 சதவீதம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்குப் பாதுகாப்பான இடம் வழங்கிடுங்கள். கடைசிக் கட்டத் தேர்தலில் மத்தியப் படைகளை தயவுசெய்து வாபஸ் பெறுங்கள்” எனத் தெரிவித்தார்.