பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர்சுகா யோஷீஹிடேவுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இரு நாடுகளில் கோவிட்-19 தொற்றின் நிலை குறித்தும், பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இது போன்ற சவால்களை எதிர்கொள்வதில் மீண்டெழும் தன்மை, பன்முகத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த விநியோக சங்கிலிகளை உருவாக்குவது, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதிசெய்வது, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி, திறன் மேம்பாட்டில் புதிய கூட்டணிகளை மேம்படுத்துவது போன்ற துறைகளில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.
இதுதொடர்பாக, பணியாளர்களின் ஆற்றலை ஒருங்கிணைத்து, பரஸ்பர பயன்களை அடைவதற்காக `குறிப்பிட்ட திறன்வாய்ந்த பணியாளர்கள் ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். மும்பை முதல் அகமதாபாத் வரையிலான அதிவிரைவு ரயில் திட்டத்தை, இருநாட்டு ஒத்துழைப்பின் பிரகாசமான உதாரணமாகக் குறிப்பிட்டதோடு, இதனை செயல்படுத்துவதில் கடைபிடிக்கப்படும் நிலையான வளர்ச்சியையும் அவர்கள் வரவேற்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்றின்போது இரு நாடுகளில் வசிக்கும் அவர்களது நாட்டு குடிமக்களுக்காக வழங்கப்படும் ஆதரவு மற்றும் வசதிகளை இரு தலைவர்களும் பாராட்டியதோடு இதுபோன்ற ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.
பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் உதவி அளிப்பதற்காக பிரதமர் சுகாவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். கோவிட்-19 சூழல் இயல்பு நிலையை அடைந்த பிறகு வெகு விரைவில் ஜப்பான் பிரதமர் சுகாவை இந்தியாவில் வரவேற்பேன் என்ற தமது எதிர்பார்ப்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.