காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா | கோப்புப் படம். 
இந்தியா

தடுப்பூசி நிறுவனங்கள் ரூ.1.11 லட்சம் கோடி லாபம் சம்பாதிக்க மோடி அரசு அனுமதி: காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

பிடிஐ

கரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் ரூ.1 லட்சத்து 11 லட்சம் கோடி லாபம் ஈட்டுவதற்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகி, நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. மேலும், தடுப்பூசி நிறுவனங்கள் விலை வைக்கவும் அனுமதித்தது.

இதன்படி, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியாருக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.

தடுப்பூசிகளுக்கு ஒரேமாதிரியான விலை வைக்க வேண்டும், 5 விதமான விலை இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று காணொலி மூலம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை பாகுபாடு கொண்டது, உணர்வற்றது. தேசத்தின் ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு நழுவிவிட்டது.

எவ்வாறு இதுபோன்ற தடுப்பூசிகளைத் தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு அனுமதிக்கலாம். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் லாபம் ஈட்டுவதற்கு ஏன் மோடி அரசு உடந்தையாக இருக்கிறது? இதற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.

தடுப்பூசி கண்டுபிடிப்பும், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பது சாதாரண சம்பவமும் அல்ல, மக்கள் தொடர்புப் பணியும் அல்ல. மக்கள் சேவைப் பணியில் மிக முக்கியமான மைல்கல். மக்களுக்கு சேவை செய்யும் இந்தப் பணியில் மக்களைப் பயன்படுத்தி யாரும் லாபம் ஈட்டக் கூடாது.

மோடி அரசு அறிமுகம் செய்துள்ள தடுப்பூசிக் கொள்கை மிகவும் பாடுபாடு கொண்டது, உணர்வற்றது. தடுப்பூசி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுவதற்கு மோடி அரசு அப்பட்டமாக அனுமதித்துள்ளது. 18 வயது முதல் 45 வயதுள்ள மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் கடமையிலிருந்தும் மோடி அரசு விலகிவிட்டது.

ஒரு தேசம், ஒரு தடுப்பூசி விலை என்று நாங்கள் கூறுவதற்கு பதிலாக, ஒரு தேசம், ஒரு தடுப்பூசிக்கு 5 விலை என்று மத்திய அரசு கொண்டு வந்தமைக்கு மத்திய சுகதாாரத்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். தடுப்பூசி நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்காக பல்வேறு படிநிலைகளில் விலை நிர்ணயிக்கப்படுள்ளது.

இந்த பல்வேறு விலையால் சீரம் நிறுவனத்துக்கு ரூ.35,350 கோடி லாபமும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.75,750 கோடி லாபமும் கிடைக்கும். நாட்டில் 18 வயது முதல் 45 வயது வரை 101 கோடி மக்கள் இருக்கிறார்கள். இதில் 50 சதவீத மக்களுக்கு மாநில அரசுகள் தடுப்பூசி வழங்கினாலும், மீதமுள்ள 50 சதவீத மக்கள் சொந்தமாகவே பணம் செலவு செய்து தடுப்பூசியை வாங்குவார்கள்.

101 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்த 2 டோஸ் வீதம் 202 டோஸ் மருந்துகள் தேவைப்படும். இந்தத் தடுப்பூசிக்கான செலவை மாநில அரசுகளும், தனி நபர்களும் ஏற்கப்போகிறார்கள்.

இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், 50 சதவீதம் தடுப்பூசிக்கான செலவை மாநில அரசுகளும், 50 சதவீதம் தடுப்பூசிக்கான செலவை தனி நபர்களும் ஏற்பார்கள். அந்த வகையில் சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துக்குத் தடுப்பூசி மூலம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 100 கோடி லாபம் கிடைக்கும்''.

இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT