திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபட, தமிழகத்தை சேர்ந்த ஒருவரை கோயிலுக்கு அனுப்பி உளவு பார்த்துள்ளனர். ஒடிஷா போலீஸ் விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் பலப்படுத்தியுள்ளது.
ரயிலில் தீவிபத்து ஏற்படுத் தியதாக, தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷ் ராமச்சந்திரன் (30) என்பவரை ஒடிஷா போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இவருக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் கருதியதால், இவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர் பல திடுக்கும் தகவல்களை கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தீவிரவாதிகளின் அறிவுறுத்தலின்பேரில், பல ரயில்களில் ரசாயன பொடிகள் மூலம் இவர் தீவிபத்து ஏற்படுத்தியுள்ளார். மேலும் திருப்பதி கோயிலில் நாச வேலையில் ஈடுபடவும் தீவிரவாதிகள் இவரை உளவு பார்க்க அனுப்பி உள்ளனர். அதன் பேரில் இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமலைக்கு வந்து, பல இடங்களை உளவு பார்த்துள்ளார்.
விசாரணையில் தெரியவந்த இத்தகவலை ஆந்திர அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒடிஷா போலீஸார் தெரிவித்தனர். இதன்பேரில் சுபாஷ் ராமச்சந்திரன் திருமலைக்கு சென்ற தேதியில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை தேவஸ்தானம் ஆய்வுசெய்தது. கோயில் உட்பட பல இடங்களில் சுபாஷ் ராமசந்திரன் படம் பதிவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தான நிர்வாகம், திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது.
நடைபாதை, அலிபிரி வாகன சோதனைச் சாவடி, மலைப்பாதைகள், கோயில் முகப்பு கோபுரம், 4 மாட வீதிகள், சத்திரங்கள், விஐபிக்கள் தங்கும் விடுதிகள், முடி காணிக்கை செலுத்தும் இடம், பஸ் நிலையம், அன்ன பிரசாத மையம், லட்டு பிரசாதம் விநியோக மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பும், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப் பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் ஒவ்வொரு வாகனமும் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது.
யார் இந்த சுபாஷ்?
சுபாஷ் ராமசந்திரன் (30) தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். சென்னைக்கு வந்து, டீ கடை நடத்தி உள்ளார். இதில் நஷ்டம் அடைந்ததால், கோயம்பேட்டில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். பின்னர் இந்த ஓட்டல் உரிமையாளரிடம் ரூ. 5 ஆயிரம் திருடி உள்ளார். மேலும் 2011-ல் பைக் திருட்டு வழக்கும் இவர் மீது பதிவாகி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து சுபாஷ் ராமச்சந்திரன், நாடு முழுவதும் திரிந்து பல ஓட்டல்களில் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மும்பைக்கு சென்ற இவருக்கு, கடந்த ஆண்டு ரியாஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர் மூலம் உத்தம், கோபால், ஆசிஷ் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் நண்பர்களாகி உள்ளனர். இதில் காஷ்மீரைச் சேர்ந்தவர் தீவிரவாதியாக இருக்கலாம் போலீஸார் கருதுகின்றனர்.இவர் கூறியதன் பேரில் மற்ற அனைவரும் ரயில்களில் நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒருவகை ரசாயனம் மூலம் இவர்கள் 7 ரயில்களில் தீவிபத்து ஏற்படுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் திருமலையில் நாசவேலையில் ஈடுபடவும் முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் திருமலைக்கு வந்து உளவு பார்த்துள்ளனர். காஷ்மீரில் இருந்து சுபாஷ் ராமச்சந்திரன் வங்கிக் கணக்கில் ரூ. 3 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஒடிஷா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை தகவல்களை தேசிய உளவுத் துறையிடமும் தெரிவித்துள்ளனர்.