கரோனா சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிப்பதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸபல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தப் பிரச்சினை மிகவும் பூதாகரமாக காட்டப்படுகிறது. எனினும் இந்த தொற்றிலிருந்து மீள மத்திய அரசும் உள்ளூர் நிர்வாகத்தினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சில தேசவிரோதசக்திகள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகளை பரப்பி அவநம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதுபோன்ற சக்திகளின் சதிவலையில் சிக்காமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா தொற்றிலிருந்து மீள அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்தத் தருணத்தில், ஊடகங்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் கரோனாவிலிருந்து மீள்வது தொடர்பான சாதகமான தகவல்களை பரப்புவதுடன் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முன்வரவேண்டும். சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். எதிர்மறையான கருத்துகளை பகிரக் கூடாது.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், சமூக, மத ரீதியான அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தொழில் - வர்த்தக அமைப்புகள் ஆகியவையும் இப்போதைய சவால்களுக்கு தீர்வு காண தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.