உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதன்காரணமாக கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உறவினர்களே ஏற்பாடு செய்து வருகின்றனர். அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில், காலி சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பி செல்ல ஏராளமானோர் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

நாடு முழுவதும் மாவட்ட தலைநகர அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: ‘பி.எம். கேர்ஸ்’ நிதியில் இருந்து தொடங்க உத்தரவு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் செயல்படும் அரசு மருத்துவமனை களில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங் கள் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிதி, 'பிஎம் கேர்ஸ்' நிதியில் இருந்து அளிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரி வித்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் 3.5 லட்சத் துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. அவர்களில் 15 சதவீதம் பேருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் அனு மதிக்கப்படும் அவர்களுக்கு செயற்கை சுவாச சிகிச்சை அவசியமாகிறது. இதன் காரணமாக மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

டெல்லியில் ஓர் ஆக்சிஜன் ஆலை கூட இல்லை. இதன்காரணமாக நாட்டின் தலைநகரில் ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட பெரும்பா்லான மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில வாரங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுக்க சுமார் 500 ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் 85 சத வீத ஆக்சிஜன், இரும்பு, உருக்கு, வாகன உதிரி பாக உற்பத்தி ஆலைகளுக்கும் 15 சதவீத ஆக்சிஜன் மருத்துவ பயன் பாட்டுக்கும் அனுப்பப்படுகிறது.

தற்போதைய இக்கட்டான சூழ் நிலையை கருத்தில்கொண்டு 100 சதவீத ஆக்சிஜனையும் மருத்துவப் பயன்பாட் டுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ரயில்கள், விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத் துச் செல்லப்படுகின்றன. மேலும் வெளி நாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்கு மதி செய்ய டெண்டர் வெளியிடப் பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜனுக்கான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அமெ ரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானப் படை சரக்கு விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் கான்சரேட்டர்் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் அலுவலக அறிவிப்பு

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கான உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான நிதி ‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் இருந்து அளிக்கப்படும். இதற்கான முறையான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்படும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் மாவட்டங்களில் தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொள்ளும்.

ஏற்கெனவே இந்த ஆண்டு ஆரம்பத்தில் 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ரூ.201.58 கோடி ‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது, மேலும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலை யங்கள் அமைக்கப்படுவதன் மூலம் நோயாளிகளுக்கு தடையில்லாமல் ஆக்சி ஜன் கிடைக்கும். ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்து நமது சுகாதாரத்துறை கட் டமைப்பு வலுவடையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கருத்து

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தாராளமாக கிடைக்கும். நாடு முழுவதும் மக்கள் பலன் அடைவார்கள்’ என்று தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT