புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை விவசாயிகள் தள்ளி வைத்துள்ளனர்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த மூன்று சட்டங்களையும் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதனையும் விவசாயிகள் ஏற்காததால் அவர்களின் போராட்டம் 5 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது.
இதனிடையே, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தற்போது கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தப் பேரணியை தற்காலிகமாக தள்ளி வைக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் (ரஜீவால்) தலைவர் பல்பீர் சிங் ரஜீவால் கூறுகையில், “வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதால் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, பேரணியை தள்ளி வைத்திருக்கிறோம். ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியலில் நாங்கள் ஈடுபட்டுள்ள போதிலும், நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் போக்குவரத்துக்கு நாங்கள் இடையூறு ஏற்படுத்துவதில்லை. கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அரசு எங்களை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை நாங்கள் ஏற்கவில்லை" என்றார்.