மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்கு கோ வின் இணையதளம், ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்து கட்டாயம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதன்பின் கடந்த மார்ச் 1-ம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இந்நிலையில், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. குறிப்பாக இளம் வயதினர் கரோனாவால் பாதிக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதற்கு ஏப்ரல் 28-ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதாவது www.cowin.gov.in இணையதளம் மற்றும் ஆரோக்கிய சேது செயலி வழியாக முன்பதிவு செய்வது கட்டாயம்.
இதற்காக கூடுதல் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியோடு கூடுதல் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். தடுப்பூசி மையங்களில் போலீஸார் மூலம் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.