இந்தியா

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: இன்று 7-வது கட்ட வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 7-வது கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது எம்எல்ஏவாக இருக்கும் தொகுதியான பபானிபூர் தொகுதி உட்பட இன்று 34 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் 284 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி தோல்வியை சுமார் 86 லட்சம் வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். ஏற்கெனவே நடந்த தேர்தல்களில் சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டுபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

796 கம்பெனிகள் மத்திய படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதேநேரம், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்ததேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 29-ம் தேதி 8-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

SCROLL FOR NEXT