கர்நாடகத்தில் அரசு அலுவலங்கள், பேருந்து நிலையம், மருத்துவ மனை ஆகிய இடங்களில் புகைப் பிடித்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை பெங்களூரில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் கூறியதாவது:
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 60 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் பலியாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லாமல் வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. ரத்தக்குழாய், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பால் மாரடைப்பு, பக்கவாதமும் ஏற்படுகிறது. மனைவி கருவுற்றி ருக்கும் போது கணவன் அருகிலிருந்து புகைப்பிடித்தால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனவளர்ச்சி பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
உலக அளவில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும், 34.6 சதவீத இளைஞர்களும் புகையிலை பயன்படுத்துகிறார்கள். கர்நாடகா வைப் பொறுத்தவரை 45 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத் துகிறார்கள்.
சமீபகாலமாக புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையை மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பெங்களூரில் 53 சதவீதம் உயர்ந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
புகைப்பிடிப்பதைத் தடுக்கவும், புகையிலை உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
புகைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் அருகில் இருப்பவருக்கும் பிரச்சினை ஏற்படுவதால், முதல் கட்டமாக அரசு அலுவ லகங்களில் தடையை மீறி புகைப்பிடிப்ப வருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். மேலும் பேருந்துநிலையம், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடிப்பவருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இதுதவிர கர்நாடகாவில் புகையிலை விளைச்சலை குறைக்குமாறு தோட்டக் கலைத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாட கத்தை புகையிலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.