இந்தியா

டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்: 10 நாளில் 11 ஆயிரம் பேர் ஓட்டுநர் உரிமம் பறிப்பு

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் வாகன ஓட்டிகள், சிக்னல் விளக்குகளை மீறுவது, மது அருந்திவிட்டும், மொபைல் களில் பேசியவாறும் செல்வது, அதிவேகமாக செல்வது என சாலை விதிகளை மீறுவது உண்டு. இவர் களை பிடிக்கும் போக்குவரத்து போலீஸார் ரூ. 100 முதல் உடனடி அபராதம் வசூலித்துவிட்டு, அனுப்பி வந்தனர்.

இந்நிலையில் விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக்கும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சாலைப் பாதுகாப்பு குழு ஒன்றை கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி அமைத்தது. நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இக்குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அளித்த பரிந்துரையில், “நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமங்களை, குறைந்தபட்சம் மூன்று மாதம் நிறுத்தி வைக்கலாம்” என்று கூறியிருந்தது.

ஓட்டுநர் உரிமங்களை முடக்கி வைக்கும் அதிகாரம் மாநில போக்குவரத்து துறையிடம் இருந்ததால், அதை செயல்படுத்து வதில் போலீஸாருக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. போலீஸார் புகாரின் பேரில் விதிகளை மீறியவர்களுக்கு போக்குவரத்து துறையினர் நோட்டீஸ் அனுப்பி, நேரில் அழைத்து அவர்களின் உரிமங்களை முடக்குவதற்குள் 3 மாதம் காலாவதி ஆகிவிடும் சூழல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை டெல்லி போலீஸார் சார்பில், உச்ச நீதிமன்றத்தின் சாலை பாதுகாப்புக் குழு முன் வைக்கப்பட்டது. இதை ஏற்று, ஓட்டுநர் உரிமத்தை பறிப்பற்கான அதிகாரத்தை டெல்லி போலீஸாரிடமே அளிக்க அக்குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பான செய்தி கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 முதல் அமலுக்கு வந்த இந்த முறையால், 10 நாட்களில் 11,000 ஓட்டுநர் உரிமங்களை டெல்லி போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநகர போக்குவரத்து காவல்துறை ஆணையர் முகேஷ் சந்தர் கூறும்போது, “நாட்டில் முதல் மாநிலமான டெல்லியில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. இதில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் சிக்கிய 11,017 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த உரிமங்கள் 3 மாதங்களுக்கு முடக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT