டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையாமல் இருப்பதைத் தொடர்ந்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மே 3-ம் தேதிவரை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.
நாட்டி்ல கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் உச்ச கட்டமாக நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதி்க்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதிவரை வரை ஒருவாரம் லாக்டவுன் அமல்படுத்தி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டார்.
ஆனாால் கடந்த சில நாட்களாக டெல்லியில் கரோனா தொற்று மிக மோசமான அளவில் இருந்து வருகிறது.
பரிசோதனை அளவை குறைத்தபோதிலும் தொற்றின் வேகம் வீரியமாக இருந்துவருகிறது, அதிலும், ஆக்சிஜன், வென்டிலேட்டர், ஐசியு சிகிச்சைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் கட்டுக்குள் வராத கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் லாக்டவுனை நடவடிக்கையை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அதாவது மே 3ம் தேதிவரை வரை நீட்டித்துள்ளது.
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
டெல்லியில் கரோனா வரைஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 19ம் தேதி விதித்த லாக்டவுன் நாளை காலை 5மணியுடன் முடிகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுன்தான் கடைசி ஆயுதம். தற்போதுள்ள நிலையில் டெல்லியின் சூழலில் முன்னேற்றமில்லை. பலரும் லாக்டவுனை மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரினர். இதனால், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து மே 3-ம் தேதி காலை 5 மணிவரை அறிவிக்கிறேன்.
கடந்த லாக்டவுனில் கடைபிடித்த அதே விதிகள்தான் நீட்டிப்பிலும் பின்பற்றப் போகிறோம், எந்தவிதமான மாற்றமும் இல்லை. அத்தியாவசியப் பணிகள், அரசு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தொடர்ந்துவீட்டிலிருந்து பணியாற்றலாம்.
ஷாப்பிங் மால், ஸ்பா, உடற்பயிறச்சிக் கூடம், கூட்டஅரங்கு ஆகியவை மூடப்படும். மளிகைக்கடை, பால்விற்பனை மையம் தொடர்ந்து செயல்படும்.
கடந்த லாக்டவுனின்போது கரோனா பாசிட்டிவ் வீதம் 36 முதல் 37ஆக அதிகரித்துள்ளது. தொற்றுவீதம் கடந்த 2 நாட்களாக சுற்று குறைந்துள்ளது, இன்று 30 சதவீதம்வரை குறைந்துள்ளது. நான் கரோனா வைரஸ் முடிந்துவிட்டதாகக் கூறவில்லை, இன்னும் சில நாட்கள் கவனிக்கவேண்டும். பாஸிட்டிவ் வீதம் உயரவும் செய்யலாம், குறையலாம்.
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வருகிறது. டெல்லிக்கு 700 டன் ஆக்ஸிஜன் தேவை. ஆனால், மத்திய அரசு 490 டன் மட்டுமே வழங்கியுள்ளது.
அதிலும் முழுமையான அளவு வந்து சேரவில்லை. 300 முதல் 335 டன்வரை நேற்று வந்துள்ளது, இதனால்தான் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.