உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் | கோப்புப்படம் 
இந்தியா

உ.பியில் கரோனா பாதிப்பு 30 சதவீதம் அதிகம்:  எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன்  பற்றாக்குறை இல்லை: முதல்வர் ஆதித்யநாத் விளக்கம்

பிடிஐ


உத்தரப்பிரதேசத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி மாநிலங்கள் தீவிரமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசித் தட்டுப்பாடும் இருந்து வருகிறது.

இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பல்வேறு நாளேடுகளின் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உத்தரப்பிரதேசத்தில் எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது. தற்போது பிரச்சினை என்னவென்றால், ஆக்சிஜனை பதுக்குவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும்தான்,அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

கான்பூர் ஐஐடி, லக்னோ ஐஐஎம், பனாராஸ் ஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து, ஆக்சிஜன் தணிக்கையை நடத்தப்போகிறோம், கண்காணிக்கப் போகிறோம். ஆக்சிஜன் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கிறது, எத்தனை நாட்களுக்கு வரும், பயன்பாடு, பகிர்மானம் ஆகியவை குறித்து இணையவழி கண்காணிப்பு செய்யப்படும்.

கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளி்க்கும் ஆக்சிஜன் தேவைப்படாது, தேவைப்படுவோருக்கு மட்டும் ஆக்சிஜன் வழங்கினால் போதும். இதுதொடர்பாக நாளேடுகள்தான் விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை அதிகரிப்பதில் சிக்கல் இருக்கிறது, அது அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும்.

கரோனா வந்தால் அது சாதாரண காய்ச்சல் என்று மக்கள் நினைத்து பெரிய தவறு செய்கிறார்கள். நானும்கூட கரோனாவில் பாதிக்கப்பட்டேன். ஆனால், உடனடியாக கரோனா தடுப்பு வழிகளைப் பின்பற்றி கடந்த 13ம்தேதி முதல் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

கடந்த ஆண்டு முதல் அலையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கரோனா 2-வது அலையில் பாதிப்பு 30 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டைவிட கரோனாவை எதிர்கொள்ள அரசு சிறப்பாகத் தயாராகியுள்ளது.

அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். தனியார் நிறுவனங்களி்ல அந்த வசதியில்லை. டிஆர்டிஓவின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 31 புதிய ஆக்சிஜன் தயாரி்க்கும் மையங்களை உருவாக்க உள்ளோம்.

அதேபோல ரெம்டெசிவிர் மருந்துக்கும் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மாநிலஅரசின் விமானம் மூலம் அகமதாபாத் சென்று மருந்து நிறுவனத்திடம் நேரடியாகக் கொள்முதல் செய்துள்ளோம். அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது.

நாட்டிலேயே முதல் மாநிலமாக, அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்பதை செயல்படுத்தியது உத்தரப்பிரதேசம்தான். 9 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி மக்களுக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT