இந்தியா

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: போர்க் கப்பலில் இருந்து இலக்கைத் தாக்கியது

செய்திப்பிரிவு

போர்க் கப்பலிலிருந்து 290 கி.மீ. தொலைவிலுள்ள எதிரிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறனுடைய பிரமோஸ் ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

15-ஆல்பா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தாவிலிருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டது.கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதி யிலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் தனது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது. இச்சோதனையின் அனைத்துப் படிநிலைகளையும் பிரமோஸ் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தது என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் கொல்கத்தா இந்தியக் கடற்படையில் இன்னும் சேர்க்கப்படவில்லை. வரும் ஜூலை மாதம் இணைக்கப்படவுள்ளது. இக்கப்பல் ஒரே சமயத்தில் 16 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவ வல்லதாகும்.

இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற்படையில் பிரமோஸ் ஏற்கெனவே இணைக்கப்பட்டு விட்டது. ரஷ்ய தயாரிப்பான தல்வார் போர்க்கப்பல் உள்பட பல்வேறு போர்க்கப்பல்களிலிலும் பிரமோஸ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

விரைவிலேயே போர் விமான மான சு-30எம்கேஐ-யிலிருந்து ஏவிப் பரிசோதிக்க தயார்நிலையில் உள்ளது.

SCROLL FOR NEXT