கோப்புப் படம் 
இந்தியா

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்: மாநிலங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது மத்திய அரசு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் நாள்தோறும் சராசரியாக 3.5 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25.52 லட்சமாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இந்த பின்னணியில் மத்திய சுகாதாரத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய வழிகாட்டு நெறிகளை வழங்கியுள்ளது.
சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் லேசான பாதிப்பு, மிதமான பாதிப்பு, தீவிரமான பாதிப்பு உள்ளோரை தனித்தனியாக பிரிக்க வேண்டும். லேசான பாதிப்பு உள்ளோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கலாம். மிதமான பாதிப்பு உள்ளோரை மருத்துவமனையின் சாதாரண வார்டில் சேர்க்கலாம். தீவிர வைரஸ் பாதிப்பு உள்ளோரை அவசர சிகிச்சை மையத்தில் சேர்க்க வேண்டும். தீவிர பாதிப்பு உள்ளோருக்கு மட்டுமே ரெமிடெசிவிர் மருந்தை வழங்க வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், ரத்த அழுத்தநோயாளிகள், நீரழிவு நோயாளிகள், நுரையீரல் நோயாளிகள், உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களது சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்மூலம் உயிரிழப்பை குறைக்க முடியும்.

தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகே நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க வேண்டும்.

தற்காலிக மருத்துவமனைகள்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாநில அரசுகளும் தற்காலிக மருத்துவமனைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும். தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசின் டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட அமைப்பு
களின் உதவியை மாநில அரசுகள் பெறலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். அவசர சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை மேம்படுத்த வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதியை மேம்படுத்த வேண்டும். வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெலிமெடிசின் திட்டம் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஆக்சிஜன், வென்டிலேட்டர், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவ
டிக்கைகளை எடுக்க வேண்டும். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை, குறித்த நேரத்தில் வழங்க வேண்டும்.

கூடுதல் தடுப்பூசி மையங்கள்

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக கூடுதல் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியோடு கூடுதல் தடுப்பூசி மையங்களை உருவாக்கலாம்.

கோவின் தளங்கள் குளறுபடி இல்லாமல் செயல்படுகின்றன. இந்த தளங்களில் தடுப்பூசிகளின் இருப்பு, பயனாளிகள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT