மேயர் தம்பதி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சித்தூர் மாநகராட்சி யின் 36-வது வார்டு உறுப்பினர் சிவப்பிரசாத் ரெட்டி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 17-ம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மோகனின் அக்கா மகன் சிண்ட்டு உட்பட இதுவரை 28 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை விசாரித்து வருகின்ற னர். இதனிடையே, சித்தூர் 2-வது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சூரிய மோகன் ராவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் “தேவையில்லாமல் பலரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தால் கொன்றுவிடுவோம்” என கூறப்பட்டிருந்தது. இக்கடிதம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சித்தூர் 36-வது வார்டு சுயேச்சை உறுப்பினரும் சித்தூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சி.கே பாபுவின் ஆதரவாளருமான சிவபிரசாத் ரெட்டியிடம் (46) போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மிட்டூரில் உள்ள தனது வீட்டில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற் கிடையே, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “உடல் நிலை சரியில்லாமல் கடந்த 4 மாதங்களாக வீட்டில் இருந்த போதிலும், போலீஸார் தேவையில்லாமல் என்னை அழைத்து சென்று விசாரணை எனும் பெயரில் மிரட்டியதால், தற்கொலை செய்து கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்தூர் முதலாவது காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.