இந்தியா

தொலைக்காட்சிகளில் திடீரென ஒளிபரப்பான மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்ட உரை; மன்னிப்புக் கேட்ட கேஜ்ரிவால்

ஆர்.ஷபிமுன்னா

பத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கரோனா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று காணொலியில் நடைபெற்றது. இதில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உரை தொலைக்காட்சிகளில் திடீரென நேரடியாக ஒளிபரப்பானததை அடுத்து, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று மன்னிப்புக் கேட்டார் கேஜ்ரிவால்.

இன்று காலை கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் பேச்சு மட்டும் திடீரென நேரடியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதில், ஆக்ஸிஜன் விநியோகத்தில் தேசிய அளவிலான கொள்கை அமலாக்கல், அதை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவது உள்ளிட்ட பல முக்கியக் கருத்துக்களை கேஜ்ரிவால் வெளியிட்டிருந்தார்.

வழக்கமாக பிரதமர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களின் உரைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவது இல்லை. இதை மீறி டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அரசு, அவரது பேச்சை மட்டும் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வெளியிட்டிருந்தது. அதுவும், அந்த ஆலோசனைக் கூட்டம் முடியும் முன்பாக வெளியாகி, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் இடையில், இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததை அடுத்து, பிரதமர் மோடி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதுகுறித்துப் பிரதமர் மோடி தனது உரையில் கூறும்போது, ‘’நமது மரபு மற்றும் பாரம்பரிய வழக்கத்தின்படி இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது கிடையாது. ஆனால், இன்று அவை மீறப்பட்டுள்ளன. ஒரு மாநில முதல்வர் இதைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார். இது எந்த வகையிலும் முறையானது அல்ல. இந்த விவகாரத்தில் என்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்’’ எனக் குறிப்பிட்டார்.

இதில், கேஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடாமல் நாகரிகமாகப் பிரதமர் மோடி, தவறை சுட்டிக் காட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் குறிப்பிடுவது தன்னைத்தான் என முதல்வர் கேஜ்ரிவாலும் புரிந்து கொண்டார். இதற்காக அவர் உடனடியாக அளித்த பதிலில் கூறும்போது, ’’நீங்கள் கூறியதை இனி நினைவில் கொள்வோம். கரோனாவால் பலியான ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு நம்பிக்கை கிடைக்க வேண்டும். எனது சார்பில் எதுவும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மிகவும் சிறப்பாக இருந்தன. இதன் அடிப்படையில் எங்களுக்கு அளித்த உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுவோம்’’ என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் எந்த ஒரு பகுதியையும் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியிட அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக முதல்வர் கேஜ்ரிவால் மன்னிப்புக் கேட்டதும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அரசியல் ஆதாயம் தேட முயன்றதாகப் புகார் கிளம்பியுள்ளது.

SCROLL FOR NEXT