மும்பையில் உள்ள விரார் மேற்குப் பகுதியி்ல் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஐசியு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் 13 பேர் உடல்கருகி உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு சப்ளை தடை பட்டதால் கடந்த இரு நாட்களுக்குமுன் 22 கரோனா நோயாளிகள் உயிரிழந்தநிலையில்,அடுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
பால்கர் மாவட்டம், வாசி விரார் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள விஜய் வல்லபா கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் உள்ள ஐசியு சிகிச்சை மையத்தில் 17 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் திடீரென ஐசியு மையத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக தீ ஐசியு வார்டு முழுவதும் பரவியது, அதிகாலை நேரம் என்பதால், கரோனா நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் பலரும் தூக்கத்தில் இருந்தனர். தீ விபத்து ஏற்பட்டு அதைத் தடுப்பதற்குள் ஐசியு வார்டில் தீ முழுவுதும் பரவியது.
தீ விபத்து குறித்துஉடனடியாக தீயணைப்பு படையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியிலும்,மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் உள்ளிட்ட கரோனாவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் வேறு ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
தற்போது மருத்துவமனையில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு நிலைமையை தீயணைப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்துக்குக் குறித்து விசாரணை போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.