இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது. ஒரே நாளில் 2,104 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,59,30,965
ஆக அதிகரித்துள்ளது.
15 நாட்களுக்கு முன்னதாக அன்றாட பாதிப்பு 1 லட்சமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான அன்றாட கரோனா பாதிப்புள்ள நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
அதேவேளையில் கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,34,54,880 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 22,91,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை கரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர்.
இதுவரை மொத்தம் 13,23,30,644 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் 16,51,711 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும். இதுவரை மொத்தமாக 27,27,05,103 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) தெரிவித்துள்ளது.