இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் 4 மடங்கு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கடந்த 6 வாரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரில் 15 சதவீதம் பேருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படுகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அவர்களுக்கு செயற்கை சுவாசம்அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் காற்றில்இருந்து ஆக்சிஜனை பிரித்துஎடுக்க சுமார் 500 ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் 85 சதவீத ஆக்சிஜன், இரும்பு மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. 15 சதவீத ஆக்சிஜன் மட்டுமே மருத்துவமனைகளுக்கு செல்கிறது.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை கருதி 100 சதவீத ஆக்சிஜன் சிலிண்டர்களையும் மருத்துவ பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் 50,000 டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த பிப்ரவரி இறுதி வாரபுள்ளிவிவரத்தின்படி மருத்துவபயன்பாட்டுக்கு நாள்தோறும் 1,273 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த 17-ம் தேதி புள்ளிவிவரத்தின்படி நாள்தோறும் 4,739 மெட்ரின் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 6 வாரங்களில் மட்டும் ஆக்சிஜன் விநியோகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT