டெல்லியில் கரோனா பரவல் எதிரொலியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு உதவ முன்வந்துள்ளது. கடந்தமுறையைப் போலவே உணவு, உடை, இருப்பிடம் மற்றும் ரூ.5,000 மாத உதவித்தொகையாக அங்கு ஆளும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு அளிக்கவிருக்கிறது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால், தலைநகரான டெல்லியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது அலையால் அங்கு தினக்கூலிகளாக வாழும் பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதிலிருந்த தப்ப அவர்கள் கடந்த வருடத்தைப் போல், பெருந்திரளாக தங்கள் ஊர்களுக்கு திரும்பத் துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பின் மீதான ஒரு வழக்கின் விசாரணை நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வந்தது.
இதில், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் சில தகவல்களை அளித்தார்.
அதன்படி, கரோனா பரவலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவு, உடை, குடிநீர், மருந்து, இருப்பிடம் ஆகியவற்றுடன் மாத உதவித்தொகையாக ரூ.5,000 அரசு அளிக்க முடிவு செய்துள்ளது.
இவற்றைக் கண்காணிக்க, டெல்லி உள்துறையின் முதன்மைச் செயலாளர் புபேந்தர்சிங் பல்லாவின் தலைமையில் ஓர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், டெல்லி காவல், தொழிலாளர், கல்வி, நிதி மற்றும் வருவாய்த் துறைகளின் சிறப்புச் செயலாளர்கள் உறுப்பினர்கள் ஆவர்.
புலம்பெயர்ந்தவர்களுக்காக இதுபோன்ற உதவிகளைக் கடந்த வருடம் துவங்கிய கரோனா முதல் அலையின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கிலும் டெல்லி அரசு செய்திருந்தது.
இதில், இரண்டு மாதங்களுக்காக அவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தமுறை ஏப்ரல் 20 முதல் டெல்லி அரசு தனது உதவிகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகச் செய்யத் துவங்கி உள்ளது. இதற்காக அவர்களது பெயர்களைப் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.,யான சஞ்சய்சிங் தொழிலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில், ‘வெளிமாநிலத் தொழிலாளர்கள் டெல்லியிலேயே தங்கி இருங்கள்.
முதல்வர் கேஜ்ரிவால் அரசு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். கரோனாவிற்கு அஞ்சிக் கிளம்புவதால் அதன் பரவல் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கையை சில தொழிலாளர் சங்கங்களும் விடுத்துள்ளன. எனினும், டெல்லியின் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கூட்டம் வீடு திரும்ப அலைமோதுவதுவது குறையவில்லை.