இந்தியா

மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

ஏஎன்ஐ

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள் எனப் பலரும் முதல் அலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2-வது அலையிலும் பலர் இலக்காகி வருகின்றனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி. ராகுல் காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எனப் பல தலைவர்கள் பாதிக்கப்பட்டனர். டெல்லி முதல்வரின் மனைவி சுனிதா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''இன்று நான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகள் மற்றும் சிகிச்சையை எடுத்துக்கொண்டு வருகிறேன். அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கவனிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT