டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம் தொடர்பாக 5 கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் செல்லவே சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அசுதோஷ், சஞ்சய் சிங் ஆகியோர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லி பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதான பார்வையாளர் அரங்கில் ‘கார்ப்பரேட் பாக்ஸ்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. அந்த பாக்ஸ்கள் அருண் ஜேட்லிக்கு நெருக்கமான ’21-வது சென்சூரி’ நிறுவனத்துக்கு ரூ.36 கோடி குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. ’21-வது சென்சூரி’ நிறுவனம் யாருடையது என்று ஜேட்லி விளக்கம் அளிப்பாரா?
ஹாக்கி இந்தியா அமைப்புக்கு ஒ.என்.ஜி.சி. அரசு நிறுவனம் ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதன் பின்னணியில் அருண் ஜேட்லி உள்ளார். ஹாக்கி இந்தியா அமைப்புக்கு நிதி அளிக்க சொல்லி நிர்பந்தம் செய்தது ஏன்?
டெல்லி கிரிக்கெட் மைதானம் எபில் என்ற நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.24 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ114 கோடி செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் எபில் நிறுவனத்துக்கு ரூ.57 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.57 கோடி எங்கே என்று ஜேட்லி கூற முடியுமா?
கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் போலி நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேட்லி விளக்கம் அளிக்க முடியுமா?
கடுமையான ஊழல் தடுப்பு விசாரணை அலுவலக (எஸ்எப்ஐஓ) விசாரணை அறிக்கையில் பல்வேறு உண்மைகளை ஜேட்லி மறைக்க முயன்றுள்ளார். அது ஏன்?
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக பதிலடி:
இந்நிலையில் ஆம் ஆத்மி எழுப்பிய 5 கேள்விகள் குறித்து பாஜக கூறும்போது, "தவறானது, முட்டாள்தனமானது" என்று சாடியுள்ளது.
“கேஜ்ரிவாலின் வயதைக் காட்டிலும் அதிகமாக ஜேட்லி பொதுவாழ்க்கையில் இருந்து வருகிறார். அவரது நேர்மையை யாரும் சந்தேகித்ததில்லை. ஒரு ஊழல் அதிகாரியை காப்பாற்ற கேஜ்ரிவால் அரசு தவறான, முட்டாள் தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. கேஜ்ரிவால் பொய்களை அடுக்குபவர் என்று பெயர் எடுத்தவர்” என்று பாஜக சாடியுள்ளது.