இந்தியா

வட தமிழகத்தில் என்டிஆர்எப் 7-வது நாளாக மீட்புப் பணி: வெள்ளம் வடிவதால் நிவாரணப் பொருட்கள் விநியோகப்பதில் தீவிரம்

ஆர்.ஷபிமுன்னா

வட தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில், என்.டி.ஆர்.எப் எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை நேற்று 7-வது நாளாக ஈடுபட்டது. தற்போது வெள்ளம் வடியத் தொடங்கியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து கடும் சேதம் விளைவித்துள்ளது. இதன் மீட்புப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து என்.டி.ஆர்.எப்.பின் 50 குழுக்கள் அனுப்பப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 194 மீட்புப் படகுகளுடன் 1700-க்கும் அதிகமான வீரர்கள் இக்குழுவில் உள்ளனர். இவற்றில் சென்னையில் 25, காஞ்சிபுரத்தில் 10, திருவள்ளூரில் 12, கடலூரில் 1,புதுச்சேரியில் 2 என்ற எண்ணிக்கையில் குழுக்கள் செயல்பட்டு வந்தன.

இவர்கள் பணியை எளிதாக்கும் பொருட்டு அக்குழுக்கள் நேற்று முன்தினம் மூன்று பெரிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளநீர் பெருமளவு வடியத் தொடங்கி விட்டதால் மக்களை மீட்கும் நிலை அதிகம் இல்லை. எனவே, மீட்புப் படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் என்.டி.ஆர்.எப். நிர்வாகப் பிரிவு டிஐஜியான ரவாத் கூறும்போது, “தமிழக அரசின் ஆலோசனையின் கீழ் எங்கள் படையினர் பணியாற்றி வருகின்றனர். தற்போது வெள்ளநீர் வெகுவாக வடிந்து விட்டதால், நிவாரண முகாம்களில் சிக்கியிருப்பவர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு விரும்பும் வரை எங்கள் படை தமிழகத்தில் தங்கி நிவாரணப் பணிகளில் உதவியாக இருக்கும். இதில் தற்போதைக்கு படைவீரர்கள் எண்ணிக்கையை குறைக்கும் எண்ணம் இல்லை. மீட்புப் பணியின் போது இதுவரையும் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவ முகாம்களும் எங்கள் குழுக்கள் நடத்தி வருகின்றன. இவற்றில் இதுவரை 319 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தேவை அதிகமாக இருப்பதால் முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.

இப்படையினரால் இதுவரையில் 22,450 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 30 கால்நடைகளும் மீட்கப்பட்டுள்ளன. 1,78,659 உணவுப் பொட்டலங்கள், 1,13,506 குடிநீர் பாட்டில்கள், 14,630 பால் பாக்கெட்டுகள், 21,020 பெட்ஷீட்டுகள் மற்றும் உடைகள், 6,800 வேறு சில உணவுப் பொருட்கள், 1,800 கிலோ மாவு, 3,100 கிலோ அரிசி ஆகியவை விநியோகிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிவாரணப் பணியின் போது அவசர உதவிக்காக கீழ்பாக்கத்தில் 24 மணி நேர மையம் செயல்படுகிறது. இதன் உதவிக்கு 011-24363260, +91-9711077372 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT