இந்தியா

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை அதிகம் வீணாக்கும் மாநிலங்கள்: தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ மூலம் அம்பலம்

செய்திப்பிரிவு

தடுப்பூசியை மாநிலங்கள் அதிக அளவில் வீணாக்கி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில்தான் மிக மோசமாக உள்ளது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் கரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

கரோனா பாதிப்பில் 4-ம் இடம்

இந்நிலையில் கரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. பல மாநிலங்களில் கரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழுஊரடங்கும், டெல்லியில் 6 நாட்களுக்கு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பூசிகளும் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மாநிலங்கள் அதிக அளவில் கரோனா தடுப்பூசிகளை வீணாக்கி வருவதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

சுமார் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 44 லட்சம் டோஸ்கள்மாநிலங்களால் வீணாக்கப்பட் டுள்ளன.

வீணாக்கப்பட்ட டோஸ்களில் தமிழகம் 12.10 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியாணா 9.74 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், பஞ்சாப் 8.12 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், மணிப்பூர் 7.8 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், தெலங்கானா 7.5 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன. கடந்த 11-ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் இவ்வளவு தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கேரளா, மேற்கு வங்கம், இமாச்சல்பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் அன்ட் டையூ,அந்தமான் நிகோபார் தீவுகள்,லட்சத்தீவுகளில் தடுப்பூசிகள் குறைந்த அளவில் வீணாக்கப்பட் டுள்ளன.

இதனிடையே தடுப்பூசி மருந்து உற்பத்திக்காக சீரம் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு ரூ.3 ஆயிரம்கோடியையும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறும்போது, “சரியான திட்டமிடாமையால் பிரச்சினை உருவாகியுள்ளது. தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நாட்டில் நிலவவில்லை. மாநில அரசுகள் கேட்கும் மருந்துகளை முடிந்தவரை உடனுக்குடன் அனுப்பி வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT