ஒரு கருத்தைப் பகிர்வது, தகவலுடன் கூடிய புகைப்படத்தைப் பதிவேற்றுவது என அனைத்தும் ஒரே தளத்தில் ஒரே தருணத்தில் சாத்தியமாகியிருக்கும் காலம் இது. ஒரு சிந்தனையை ஒருவரோடு, ஒரு குழுவோடு, ஒரு கூட்டத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகம் முழுக்க அரை நொடியில் கொண்டு சேர்க்கும் வல்லமையை பெற்றிருக்கும் சமூக வலைதளங்களின் ஆற்றலை ஆக்கபூர்வ கருவியாக பயன்படுத்த துவங்கியிருக்கிறது மத்திய அரசு. இதில் முன்னோடியாகத் திகழ்பவர் பிரதமர் நரேந்திர மோடி.
குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்கிறார் என்ற அறிவிப்பு தொடங்கி, தன்னுடைய சமீபத்திய 'திடீர்' பாகிஸ்தான் பயணம் வரை பல முக்கிய அறிவிப்புகளை >தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மோடி.
விரல் நுனி உரசலில் பதிவிடப்படும் செய்திகள் விரைந்து சென்று மக்களை சேரும் இந்த நவீன யுக்தியை மோடியைத் தொடர்ந்து, அவருடைய அவையைச் சார்ந்த பல அமைச்சர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
வெளியுறவுத் துறை அமைச்சர் >சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் பதிவுகள் போர்க்காலத்தில் ஆதரவின்றி ஏமனிலும் ஈராக்கிலும் தவித்த இந்தியர்களை மீட்கவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளி சார்ந்த பெண்ணை மீட்கவும் உதவியது.
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்களை அரபு நாட்டில் துன்புறுத்துவது போன்ற காணொளி ட்விட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை உடனடியாக கவனித்த சுஷ்மா, அடுத்த ஒரு வாரத்தில் அந்த 3 இளைஞர்களையும் தாயகம் திரும்ப வழிவகை செய்தார்.
மக்களை எளிதில் சென்றடையும் விரைவான விவேகமான இந்தக் கருவியை மேலும் திறம்பட கையாள்பவர் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு. இடர்களின் மடியில் இருந்த பயணிகள் ட்விட்டர் மூலம் விடுத்த கோரிக்கைகளுக்கு ரயில்வே அமைச்சர் முன்னெடுத்த விரைவான நடவடிக்கை மக்களின் நல்லாதரவையும், நம்பிக்கையையும் ஒருசேரப் பெற்றது.
பெரும்பாலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் இயங்கி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, மனிதவள மேம்பட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ருதி இராணி வரை சமூக வலைதளத்தில் அனைவரின் பங்கும் அளப்பறியது.
மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தன் துறை சார்ந்த தினசரி பதிவுகளை ட்விட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தர வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதாக கூறும் இவர், இந்த கிராமங்கள் மின் வசதி பெற்று வருவதை அறிவதற்காக ஒரு மொபைல் செயலி (Mobile Application) தயாரித்ததோடு, அந்த விவரங்களை தனது ட்விட்டர் கணக்கிலும் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் சமூக வலைதள செயல்பாடுகளுக்கு "ச்சா கயே, ச்சா கயே" (முத்திரை பதித்துவிட்டீர்கள்) என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியதில் எந்த ஐயமுமில்லை.
மகாராஷ்டிரா ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு நிகழ்ந்த தொல்லைக்கும் சீண்டலுக்கும் எதிராக பதியப்பட்ட ட்வீட்டின் மீதான நடவடிக்கை, பிஹார் ரயிலில் ஆறு மாத குழந்தைக்கு பால் இல்லாமல் தவித்த தாய்க்கு உடனடியாய் வழங்கப்பட்ட உதவி என தன் பார்வைக்கு கீழ் வரும் அனைத்து பிரச்சினைகளையும் எந்த பாரபட்சமுமின்றி >ரயில்வே துறை அமைச்சர் கையாளும் விதம் புத்துணர்வான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துறைக்கு தலைமையேற்றிருக்கும் அமைச்சரே உச்சபட்ச ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் இயங்கி வரும்வேளையில் இயல்பாகவே அத்துறை முழுமையும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்புடன் இயங்குவது கண்கூடாக தெரிகிறது.
தன்னுடைய தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மட்டுமல்லாமல், 610,000 மக்கள் பின் தொடர்கிற @Railminindia என்கிற துறை சார்ந்த ட்விட்டர் கணக்கையும் பார்வையிடுகிறார் ரயில்வே அமைச்சர் பிரபு.
"அனைத்து பொது மேலாளர்களும், ரயில்வே கோட்ட மேலாளர்களும் ட்விட்டரில் இணையும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். 23 மில்லியன் மக்கள் தினசரி பயணம் செய்கிற ரயில்வே துறையில் தரம் மிக்க வாடிக்கையாளர் சேவையை வழங்கிட சிறப்பான ஒரு சமூக வலைதள தொழில்நுட்பம் விரைவில் நிர்வகிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.
"ரயில்களின் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், முன்பதிவு செய்யப்பட்டதன் தற்போதைய நிலை அல்லது ஓய்வு அறையின் பதிவு விபரங்கள் என பல அம்சங்கள் ட்விட்டரில் பதிவேற்றப்படும். மேலும் தற்சமயம் நடப்பில் உள்ள தகவலறியும் சேவை (எண் 139) படிப்படியாக ரயில்வே துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இணைக்கப்படும்" என்று ரயில்வே துறையின் சமூக வலைதள குழு தெரிவித்துள்ளது.
அவசர மருத்துவ உதவி, புகார்கள் மட்டுமல்லாமல் பயணிகளின் பாதுகாப்பும் உணவும் உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டியவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதற்கான தக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக வலைதளங்களை பெரிதாக எந்த மாநில அரசும் பயன்படுத்த துவங்காத இந்த நேரத்தில் மத்திய அரசு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
எஸ்.ஜி.சூர்யா, கட்டுரையாளர் - தொடர்புக்கு mail@suryah.in