இந்தியா

எதிர்க்கட்சிகளை குறிவைக்க சிபிஐ-க்கு அறிவுறுத்தல்: கேஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு

பிடிஐ

எதிர்க்கட்சிகளை குறிவைத்து வீழ்த்தவே சிபிஐக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புதிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பியுள்ளார்.

டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக இது அமைந்துள்ளது.

டெல்லி முதல்வர் அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டது, அந்தச் சோதனைக்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதும், டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார் கோப்புகளுக்காகவே சிபிஐ சோதனை என்றும், அருண் ஜேட்லியை காக்கவே இந்தச் சோதனை என்றும் அடுக்கடுக்காக புகார்கள் விடுக்கப்பட்ட வண்ணம் இருந்தன. இதற்கு பாஜகவின் பதில் பதற்றம் நிரம்பியதாகவே காணப்பட்டதாக எதிர்க்கட்சிகளும் குடிமைச் சமூக அரசியல் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து எதிர்க்கட்சிகளையும் குறிவைக்குமாறு சிபிஐக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக வழிக்கு வராதவர்களை முடித்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஒரு சிபிஐ அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிரான தனது கருத்துகளை கேஜ்ரிவால் ட்விட்டர்கள் மூலம் வெளியிட்டு வருகிறார். அதுவும் முதன்மை செயலர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் சிபிஐ சோதனையின் போது நேரலை ட்வீட்களில் இறங்கினார் கேஜ்ரிவால்.

அருண் ஜேட்லியின் மறுப்பை உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, அவர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்று கேஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT