இந்தியா

கரோனா நோயாளிகள் அதிகம் உள்ள 10 மாநிலங்கள் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.5 கோடியைத் தாண்டியது. 24 மணி நேரத்தில் 1,619 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அடிப்படையில் முதல் 10 மாநிலங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில் நேற்றைய நிலவரப்படி 6.8 லட்சம் நோயாளிகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் (1.9 லட்சம்), கர்நாடகா (1.33 லட்சம்), சத்தீஸ்கர் (1.28 லட்சம்) ஆகியவற்றில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா சிகிச்சை பெறுகின்றனர். கேரளா (94,009), டெல்லி (74,941), தமிழ்நாடு (70,391), மத்திய பிரதேசம் (68,576), ராஜஸ்தான் (67,135), குஜராத் (61,647) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 68 ஆயிரத்து 631 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 503 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 60 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 8,468 பேருக்கு கரோனா உறுதியானது. 53 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 12,354 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT