கரோனா பரவல் காரணமாக அயோத்தி ராமஜென்மபூமி வளாகத்தில் ராமநவமி விழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்படும் என ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஒவ்வொரு வருடம் ராமநவமி மிகவிமரிசையாகக் கொண்டாப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் வரையிலான சாதுக்களும், பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம்.
இதுபோன்ற கொண்டாட்டம், கரோனா பரவலால் செய்ய வேண்டாம் என அயோத்தியின் சாதுக்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்தவருடம் ராமநவமியை தங்கள் வீடுகளிலேயே கொண்டாவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்கும் வகையில் இன்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், இந்த வருடம் ராமநவமியை அனைவரும் தங்கள் வீடுகளிலேயே கொண்டாட வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக அயோத்தியில் கோயில்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். தற்போது, இரண்டாவது முறையாகப் பரவி வரும் கரோனாவை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அயோத்தியில் அரசு மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்காக, அயோத்தியின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக அயோத்தி ராமஜென்மபூமி வளாகத்தில் ராமநவமி விழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்படும் என ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அயோத்தியில் ராமஜென்ம பூமி விழா வழக்கமான முறையில் கொண்டாடப்படும். ஆனால் நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ராம நவமி கொண்டாட்டங்களில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொண்டாட்டங்கள் அனைத்தும் ராமஜென்மபூமி வளாகத்திற்குள் மட்டுமே நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்க எந்த அனுமதியுமில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.