இந்தியா

சொந்த தொகுதி வாரணாசியின் நிலவரம் பற்றி மோடி ஆலோசனை

செய்திப்பிரிவு

தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

உத்தர பிரதேசத்தில் நாள்தோறும் 25,000-க்கும் மேற் பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. புண்ணிய தலமான வாரணாசியில் தினசரி 1,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் உத்தரபிரதேச சுகாதாரத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள், போலீஸார், உள்ளூர் எம்எம்ஏக்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடந்த 6 ஆண்டுகளில் வாரணாசி மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கரோனா வைரஸுக்கு எதிராக போரிட முடிகிறது.

வாரணாசி தொகுதியில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை கண்டுபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா பிரச்சி னையில் வெற்றி பெற முடியும்.

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 6 அடி இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல் கரோனா அலையை தடுத்தது போன்று 2-வது கரோனா அலையையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

கரோனா நோயாளிகளுக்கு தன்னலமின்றி சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் நன்றியை உரிதாக்குகிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

SCROLL FOR NEXT