இந்தியா

ராமநவமிக்காக அயோத்தி எல்லைகளுக்கு சீல்: ஹரித்துவார் கும்பமேளா சாதுக்களுக்கும் அனுமதி இல்லை

ஆர்.ஷபிமுன்னா

ஏப்ரல் 21 இல் வரவிருக்கும் ராமநவமிக்காக அயோத்தியின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளது. வெளியாட்கள், ஹரித்துவார் கும்பமேளாவிலிருந்து திரும்பு சாதுகள் என அனைவருக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஒவ்வொரு வருடம் ராமநவமி மிகவிமரிசையாகக் கொண்டாப்படுகிறது. இதில் சுமார் 20 லட்சம் வரையிலான சாதுக்களும், பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம்.

இதுபோன்ற கொண்டாட்டம், கரோனா பரவலால் செய்ய வேண்டாம் என அயோத்தியின் சாதுக்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்தவருடம் ராமநவமியை தங்கள் வீடுகளிலேயே கொண்டாவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை ஏற்கும் வகையில் இன்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், இந்த வருடம் ராமநவமியை அனைவரும் தங்கள் வீடுகளிலேயே கொண்டாட வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக அயோத்தியில் கோயில்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். தற்போது, இரண்டாவது முறையாகப் பரவி வரும் கரோனாவை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அயோத்தியில் அரசு மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக, அயோத்தியின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையில் வெளியாட்களுக்கும், ஹரித்துவாரில் கும்பமேளா முடித்து வரும் சாதுக்களுக்கும் கூட அனுமதி கிடையாது என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இது குறித்து அயோத்யா மாவட்ட ஆட்சியரான அனுஜ் குமார் ஜா கூறும்போது, ‘கரோனா பரவலை தடுப்பதே நமது முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

இதற்காக, அயோத்தியில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுவதற்கு முன் எச்சரிக்கையாகத் தடை விதித்துள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நாட்களில் அயோத்தியின் சரயு நதிக்கரைகளில் பக்தர்களின் புனித நீராடலும் அதிக எண்ணிக்கையில் இருக்கும். தற்போதைய தடையின் காரணமாக சரயுவில் இரும்பு தடைகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீராமஜென்மபூமி கோயிலின் தலைமை அர்சகரான ஆச்சார்யா சத்யேந்தர தாஸ் கூறும்போது, ‘ராமநவமி அன்று ராமர் கோயிலில் ராம் லல்லா விராஜ்மானுடன் அதன் அர்சகரும் பாதுகாப்பு மட்டுமே இருப்பார்.

கரோனா பரவல் காரணமாகப் பக்தர்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கொண்டாட்டத்திற்கு கரோனாவால் இரண்டாவது வருடமாக அயோத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT