நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலையடுத்து, மேற்கு வங்கத் தேர்தலில் தான் பங்கேற்க இருக்கும் அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதுவரை 5 கட்டத் தேர்தல் முடிந்துள்ளன. இன்னும் 3 கட்டத் தேர்தல் நடக்க உள்ளன. இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.
அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்கள் சமூக விலகலைக்கடைபிடிக்க வேண்டும், முக்கவசம் அணிய வேண்டும் என அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தியும் மக்கள் அதை பின்பற்றுவதில்லை. கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே.வங்கத்தில் நடக்கும் அடுத்த 3 கட்டத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, பிரச்சாரம் செய்யும் நேரத்தையும் தேர்தல் ஆணையம் குறைத்து 48 மணிநேரத்துக்குமுன்பே முடிக்க வேண்டிய பிரச்சாரத்தை 78 மணிநேரமாக நீட்டித்துள்ளது .
மேலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பொதுக்கூட்டம் , பேரணிகள் உள்ளிட்டவற்றை நடத்தவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனா மூலம் 2.61லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர் , 1501 பேர் உயிரிழந்தனர். நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரி்த்து வருகிறது.
இதை உணர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மே.வங்கத்தில் தான் மேற் கொள்ள திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக இன்று அறிவித்தார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தி்ல நான் மேற்கொள்ள இருந்த அனைத்து விதமான தேர்தல் பிரச்சாரங்களையும் ரத்து செய்கிறேன்.
தற்போதுள்ள சூழலில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டம், தேர்தல் பிரச்சார ஊரவலம் நடத்த வேண்டுமா என்பதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று நான் அறிவுரை கூறுகிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.