இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 1.90 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவி்க்கின்றன.
கரோனா வைரஸ் 2-வது அலையின் பிடிக்குள் இந்தியா சிக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் வார இறுதி ஊரடங்கையும், பல கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு அது தொடர்ந்து வருகிறது.
இந்தவாரம் தொடங்கும்போது, அதாவது 12ம் தேதி இந்தியாவில் நாள்தோறும் 1.68,912 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர், 904 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்தஆண்டு அக்டோபர் மாதத்துக்குப்பின் முதல் முறையாக உயிரிழப்பு 900க்கு மேல் அதிகரி்த்தது. ஆனால், 13-ம் தேதி கரோனா பாதிப்பு 1,61,736 ஆகவும் உயிரிழப்பு 879 ஆகவும் குறைந்தது.
கடந்த 14-ம் தேதி கரோனாவில் 1,84,372 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டனர், ஒரே நாளில், 1,027 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப்பின் ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டது.
15-ம் தேதி எப்போதும் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது, உயிரிழப்பு 1,038 ஆகஅதிகரித்தது
கடந்த 16ம் தேதி முதல் கரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது. அன்றைய தினம், 2,17,353 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 1,185 பேர் உயிரிழந்தனர், 17-ம்தேதி 1,341 பேர் உயிரிழந்தனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் கரோனா பாதிப்பு 14,526,609 ஆகவும், குணமடைந்தோர் 12,67,120ஆகவும் இருக்கிறது. 16,79,740 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 12ம் தேதி முதல் 17ம் தேதிவரை இந்தியாவில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 804 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக நாள்தோறும் ஒரு லட்சத்து 94 ஆயித்து 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பைப் பொறுத்தவரை கடந்த வாரத்தில் 6 ஆயிரத்து 374 பேர் உயிரிழந்துள்ளனர் , சராசரியாக 1,062பேர் நாள்தோறும் கரோனாவில் பலியாகினர்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகளை விதி்த்து வருகின்றன. டெல்லியில் நேற்று மட்டும் 24,735 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வார இறுதி ஊரடங்கை டெல்லி பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கரோனா கோர முகத்தை காட்டி வருவதால், அங்கு மாநிலம் முழுவதும் இரவு 8 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு அடுத்த 15 நாட்களுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. முதுகலை நீட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதுதவிர சிஐஎஸ்சிஇ வாரியமும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது