மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் 'முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்டவாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஒரு சர்வாதிகாரியை போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி. மக்கள் எதற்காக தனக்கு வாக்களித்து முதல்வர் ஆக்கினார்கள் என்பதையே அவர் மறந்துவிட்டார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த10 ஆண்டுகளில் எந்தவொரு திட்டத்தையும் மம்தா செயல்படுத்த வில்லை.
ஒருகாலத்தில் நாட்டுக்கே வேலைவாய்ப்பு வழங்கும் மையமாக மேற்கு வங்கம் விளங்கி யது. ஆனால் இன்றைக்கோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. லஞ்சத்துக்கும், அராஜகத்துக்கும் பயந்து, பல தொழில் நிறுவனங்கள் மாநிலத்தை விட்டே வெளியேறி விட்டன. இதன் காரணமாக, மேற்கு வங்க மக்கள் இன்று வேலை தேடி வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். இதுதான் மம்தா பானர்ஜி செய்த மகத்தான சாதனை.
ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில், மேற்கு வங்கம் மட்டும் பின்னோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக மேற்கு வங்கத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட செயல்படுத்த மம்தா பானர்ஜி அனுமதிக்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியை ஒரு மிகப்பெரிய சுவராக நின்றுகொண்டு மம்தா பானர்ஜி தடுக்கிறார்.
மாநிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நடத்தும் கூட்டங்களில் மம்தா பானர்ஜி இதுவரை கலந்து கொண்டதில்லை. நிதி ஆயோக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றதில்லை. மாநிலத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் ‘தான்' என்ற அகங்காரமே அவருக்கு பெரிதாக உள்ளது. இவரை போன்றஒரு தலைவரால், மாநிலத்துக்கு என்ன நன்மையை செய்துவிட முடியும்?
இறந்த உடல்களில் அரசியல்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும் என்பதுமம்தாவுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. ஆகவே, பாஜகவுக்கு எதிராக கீழ்த்தரமான சதி செயல்களில் அவர் ஈடு பட்டு வருகிறார்.கடந்த 10-ம் தேதி கூச்பெஹாரில் நடந்த தேர்தல் வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை ஊர்வலமாக கொண்டு செல்லுமாறு கூச்பெஹார் திரிண மூல் தலைவருக்கு மம்தா தொலைபேசியில் அறிவுறுத்து கிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. விரைவில் இதனை நீங்களும் (மக்கள்) கேட்பீர்கள். இறந்தவர்களின் உடல் களை வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு மம்தா சென்றுவிட்டார்.
தேர்தலில் வெற்றி பெறு வதற்காக எந்த நிலைக்கு கீழே செல்லவும் மம்தா தயங்க மாட்டார் என்பதற்கு இதுவே உதாரணம். இந்த தேர்தலுடன் மம்தாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். விரைவில் அவருக்கு ‘முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.