பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 14 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று இந்தியாவிலிருந்து தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பஇங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன்பெற்று அதைத்திருப்பித் தராமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் நீரவ் மோடி.
இந்நிலையில் லண்டனில் 2019-ல் மார்ச் மாதம் நீரவ் மோடிகைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் தற்போது வரை லண்டன் சிறையில் உள்ளார். இவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை சிபிஐ எடுத்து வந்தது.
இந்தியாவில் தனக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்றும், தன்னை சிறையில் அடைக்கும் சிறைச்சாலையில் போதிய வசதிகள் இல்லை என்றும் நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். இதனால் ஏறக்குறைய கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் நீரவ் மோடி அடைக்கப்பட உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலை குறித்த வீடியோ காட்சிகளை லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இந்திய தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான உத்தரவுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உத்தரவில் அந்நாட்டு உள்துறைச் செயலர் பிரீத்தி படேல் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 28 நாள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.