தேச வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நேஷனல் ஹெரால்டு வழக்கை காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது வரும் 25-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய நிர்வாக தினத்தை கொண்டாடு வது, ஜனவரி 12-ம் தேதி கொண்டா டப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ் வொரு மக்களவை தொகுதியிலும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சிகள் நடத்து வது உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.
கூட்டத்துக்கு பின் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து கூட்டத்தில் கவலை தெரி விக்கப்பட்டது. வளர்ச்சி பாதைக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடும் விதத்தில் நடந்து கொள்வது, தற்கொலைக்கு இணையானது. தேச நலனுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் நேஷனல் ஹெரால்டு வழக்கை காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. இது மிகவும் தவறானது குளிர்கால கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களில், பாஜகவின் அனைத்து உறுப்பினர்களும் இரு அவைகளுக்கும் நிச்சயம் வர வேண்டும் என்று கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னைக்கு பாஜக எம்பிக் கள் அனைவரும் ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர், ‘‘எல்லாவற்றுக்கும் பிரதமரை குற்றம்சாட்டுவது தான் தற் போதைய ‘பேஷன்’. யாருக்காவது வயிற்றுவலி ஏற்பட்டால் கூட, அந்த நோய் பிரதமர் அலுவலகத் தில் இருந்து தான் பரப்பி விடப் பட்டது என்று கூறுவது இயல்பாகி விட்டது’’ என்றார்.
முன்னதாக நடந்த இந்த கூட்டத்தின் போது, சரக்கு மற்றும் சேவை வரி உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து எதிர்க்கட்சிகளிடம் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என பாஜக எம்பிக்களிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால், அவரை தவிர பிற முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.