நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்ட வழிமுறைகளைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் முதல் அலை ஏற்பட்டபோது, பிரதமர் மோடி கொண்டுவந்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறை, மணி அடித்தல், தட்டில் ஓசை எழுப்புதல், கடவுளைத் துதித்துப் பாடுதல் போன்றவற்றின் மூலம் கரோனா கட்டுப்படும் என்று கூறியதை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த திட்டமிடப்படாத லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் நசிந்துபோனது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
தற்போது தடுப்பூசி போடும் முகாமிலும் சரியான நேரத்துக்கு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தவறாகக் கையாள்கிறது என்று ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
அதில், “கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையின் முதல் நடவடிக்கை, துக்ளக் லாக்டவுனை அமல்படுத்தியது, 2-வது நடவடிக்கை, மணி ஓசை எழுப்பச் செய்தல், மூன்றாவதாக, கடவுளைத் துதித்துப் பாடுதல்” எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் டெல்லியை ஆண்ட துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த முகமது பின் துக்ளக் போன்று, எதையும் திட்டமிடாமல், தன்னிச்சையாக இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.