கோப்புப்படம் 
இந்தியா

மிரட்டும் கரோனா; இந்தியாவில் இதுவரையில்லாமல் ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பாதிப்பு: 7 மாதங்களுக்குப் பின் ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்த உயிரிழப்பு

பிடிஐ

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,185 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 15 லட்சத்து 69 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,185 பேர் உயிரிழந்தனர். 2020், செப்டம்பர் 19-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின் இப்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 37 நாளாக கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து அதன் சதவீதம் 10.98 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 1,35,926 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர், அதற்கு முன்பாக அதிகபட்சமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ல், 10,17,754 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுவரை கரோனாவிலிருந்து 1 கோடியே 25 லட்சத்து 47ஆயிரத்து 866 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 87.90 ஆகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையில், இதுவரை 26 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரத்து 625 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும்14 லட்சத்து 73 ஆயிரத்து 210 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT