கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவுக்கு மாநில முதல்வர் உம்மன் சாண்டிக்கு விடுத்த அழைப்பு திரும்பப் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேரள ஆளும் காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கொல்லத்தில் எஸ்என்டிபி என்ற ஈழவர் சமூக அமைப்பு சார்பில் அம்மாநில முன்னாள் முதல்வர் ஆர்.சங்கரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் முதல்வர் உம்மன் சாண்டி பங்கேற்கவிருந்தார். இந்நிலையில் சாண்டி நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், “கொல்லம் விழாவில் பிரதமர் மோடியுடன் நான் பங்கேற்பதை சிலர் விரும்பவில்லை. எனவே விழாவை தவிர்க்குமாறு எஸ்என்டிபி நிர்வாகிகள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். எனவே நான் விழாவில் பங்கேற்கமாட்டேன்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறும்போது, "கொல்லம் விழாவில் உம்மன் சாண்டி பங்கேற்க விடாமல் பிரதமர் மோடி தடுத்துவிட்டார். இதன் மூலம் கேரள மக்களை அவர் அவமதித்து விட்டார். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இந்நிலையில் கேரள முதல்வர் சாண்டி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து கேரள ஆளும் காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “கொச்சி விழாவில் கேரள முதல்வர் சாண்டிக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்யும் முடிவை விழா ஏற்பாட்டாளர்கள் எடுத்துள்ள னர். இது தனியார் அமைப்பு நடத் தும் விழா. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை” என்றார்.
பாஜக செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “ராகுல் காந்தி எதற்கெடுத்தாலும் பாஜக மற்றும் மோடி மீது குற்றம் சாட்டுகிறார். அவரது முதிர்ச்சி இன்மையையே இது காட்டுகிறது” என்றார்.-